Sunday, July 24, 2011
பேஸ்புக் மற்றும் ருவிட்டர் தொடர்பாக அவுஸ்திரேலியப் பள்ளிகளில் பாடம்
கணினி அச்சுறுத்தல்கள், வலைத்தளங்கள் மற்றும் ஒன்லைன் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் பேஸ்புக், ருவிட்டர் பற்றிய கல்வியினை அவுஸ்திரேலியா தனது பாடசாலைகளில் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
சில பாடசாலைகள் ஏற்கனவே முறையான வலைப்பின்னல் பயன்பாட்டைப் பற்றிக் கற்பிக்கத் தொடங்கிவிட்டன.
சிட்னியிலுள்ள ஸோர் (Shore) ஆண்கள் பாடசாலை, மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பார்க்கும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடியளவு முதிர்ச்சி போதாமைபற்றி அவர்களது பெற்றோர்களுக்கு எச்சரித்துள்ளது.
அந்நாட்டின் முதன்மை பெற்றோர் குழாம், ஒன்லைன் செயற்பாடு பற்றியும் தனிநபர் பாதுகாப்பு பற்றியும் மனதைக் குழப்பும் அல்லது கசப்பான விடயங்களடங்கிய செய்திகளை வெளியிடுவதன்மூலம் ஏற்படும் நீண்டகால விளைவுகளைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டுமென பாடசாலைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது கணினி அச்சுறுத்தல்களினாலும் இனவேறுபாடு, மொழியில் வேறுபாட்டுச் செய்திகளாலும் பாலியல் தொந்தரவுச் செய்திகளாலும் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தொடர் தற்கொலைகளைத் தொடர்ந்தே மேற்கொள்ளப்பட்டது.
நியூ சவுத் வேல்சின் பெற்றோர், பிரஜைகள் அமைப்பில் 2,200 பாடசாலைகளிலுள்ள பெற்றோர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த தொந்தரவு தரக்கூடிய விடயங்களால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய விளக்கமின்மை மாணவர்களிடம் காணப்படுகின்றதென இந்த அமைப்பு கூறுகின்றது.
பாடசாலைக் கற்கைநெறியில் இவைபற்றிய கற்கைநெறியையும் உள்ளடக்குமாறு அரசாங்கத்திடம் இவ்வமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் பேச்சாளர் டேவிட் கிப்ளின் கூறுகையில், ‘மாணவர்கள் எந்தவிதமான பின்விளைவுகள் பற்றியும் தெரியாமலே இச்செயற்பாடுகளுக்குள் இறங்குகின்றார்கள்,’ என்றார்.
‘கணினி அச்சுறுத்தலானது அலட்சியமாக விடக்கூடிய விடயமல்ல. சில சந்தர்ப்பங்களில் இது தொடர்ச்சியான தொந்தரவுகளைத் தரக்கூடும்.
இத்தொந்தரவுகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கமுடியாமல் இறுதியில் மன அழுத்தத்திற்குள்ளாகித் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளும் நிலைக்குக்கூடப் பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர்.
’15 வயதில் செய்யும் பிழைகள் ஒருவரை 10 வருடங்களின் பின்னரும் தாக்கக்கூடும்,’ என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரிமொதி ரைற் கூறியிருந்தார்.
யூ ரியூப்பில் அண்மையில் வெளிவந்த மைதானச் சண்டைகள் பற்றிய செய்திகளை அவுஸ்திரேலியப் பள்ளிகள் காட்டும் நிலை தற்போது காணப்படுகின்றது.
தொலைக்காட்சியில் இதன் சண்டையாளர்களைக் காட்டியபின்னரே இவற்றில் சில சண்டைக்காரர்கள் புகழ்பெற்றனர். மிருக வதைச் சம்பவங்களும் இவ்வாறுதான் புகழ்பெற்றன.
ஒரு சமூக ஊடக ஆய்வாளரான தோமஸ் ரியூட்ஹோப் கூறுகையில், அவுஸ்திரேலியப் பாடசாலைகளில் கணினி அச்சுறுத்தல்கள் கட்டுமீறிச் செல்கின்றதென்றும் இவற்றிற்கான ஒன்லைன் பழக்கவழக்கங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
மற்றவர்களைப் பற்றிச் சிந்தியாமல் ‘எதையும் செய்யலாம்’ என்ற ஒன்லைன் பண்பாட்டிற்குள் வீழும் இளம் அவுஸ்திரேலியச் சமுதாயத்தை நாம் இழந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்கள் பற்றிய முக்கியமான அபாயங்கள் பற்றி அறியாமலுள்ள ஆசிரியர்களுக்கும் இந்த வகுப்புகள் உதவும் என்று பெற்றோர் சங்கம் கூறியது.
Subscribe to:
Posts (Atom)